அதிமுக தேர்தலுக்காக சூழ்ச்சி செய்கிறது!

அதிமுக தேர்தலுக்காக சூழ்ச்சி செய்கிறது!
Published on

தருமபுரி நிகழ்வுகளுக்குப் பிறகு, தமிழகத்தில் சாதிய அரசியல் பற்றிய பேச்சுகள் அதிகரித்திருக்கின்றன. அது பற்றிய உங்களுடைய கருத்துகள்...?

திராவிட இயக்கங்களும், இடதுசாரிகளும், புரட்சியாளர் அம்பேத்கர் இயக்கங்களும் கடந்த 100 ஆண்டுகளாகச் செய்த முற்போக்கான மாற்றங்களைச் சிதைக்கும் வகையிலும், சமூகத்தை 100 ஆண்டுகளுக்குப் பின்னால் இழுத்துச் செல்லும் வகையிலும் சாதியவாதிகள் வெளிப்படையாகச் செயல்படுவது மிகுந்த வேதனையாக உள்ளது. அரசியல் ஆதாயங்களுக்காக வெளிப்படையாகச் சாதிய அரசியலை முன்னெடுக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. இதனால் ஏழை எளிய மக்கள் இரத்தம் சிந்துவதைத் தவிர, அவர்களுக்கு வேறு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை.

நீங்களும் உங்கள் அமைப்பும் பிற்படுத்தப்பட்ட சாதியத் தலைவர்களால் குறிவைத்துத் தாக்கப்படுவது பற்றி..?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஏற்கெனவே கூடிப்பேசி, கலந்தாய்வு செய்து எடுத்த முடிவுகளைத்தான் இப்போது அவர்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தருமபுரி தாக்குதல், அதன் தொடர்ச்சியாக மண்டலவாரியாக சாதியவாதிகளின் கூட்டம், ஒட்டுமொத்த தலித்துகளையும் ஒழுக்கக் கேடர்களாகச் சித்தரிப்பது, குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்துகிற முயற்சி ஆகிய அனைத்தும் ஏனோதானோவென்று நடப்பவையல்ல. இவை யாவும் திட்டமிட்ட நடவடிக்கைகளேயாகும். தருமபுரி தாக்குதல்களுக்கு பாமகவும், பாமகவின் வன்னியர் சங்கமும்தான் காரணம் என்று வன்முறை நடந்தவுடனேயே பல்வேறு அமைப்புகள் கூறிவிட்டன. நான் வெளிநாட்டிற்குச் சென்று திரும்பிய நிலையில், நவம்பர் 14ஆம் தேதிதான் செய்தியாளர்களைச் சந்தித்தேன். அப்போது ஒருவர் கேட்ட கேள்விக்கு, ‘பா.ம.க. முன்னின்று இதனை ஒருங்கிணைத்திருக்கிறது. மற்ற கட்சிகளும் மற்ற சாதியினரும் இதில் கலந்திருக்கலாம்’ என்று மட்டும் கருத்துச் சொன்னேன். எங்களுக்கு முன்பு கருத்துச் சொன்னவர்களையெல்லாம் விட்டுவிட்டு கடைசியாகக் கருத்து சொன்ன என்னையும் விடுதலைச் சிறுத்தை களையும் குறிவைத்துத் தாக்குவது என்பது பல மாதங்களுக்கு முன்பே அவர்கள் எடுத்த முடிவை தற்போது செயல்-படுத்துவதாகத்தான் தெரிகிறது.

இதற்கு என்ன காரணம்?

பொதுவாக தலித்துகளுக்கு எதிராகப் பேசுவதன் மூலம் சாதி உணர்வாளர்களை ஒருங்கிணைத்துவிட முடியும் என்று அவர்கள் நம்புவது. அதிலும் குறிப்பாக வடமாவட்டங்களில் வன்னியர் சமூகத்தை ஒருங்கிணைக்க விடுதலைச் சிறுத்தைகளைத் தாக்குவதுதான் சிறந்த உத்தி என்று அவர்கள் ஆய்வு செய்து முடிவெடுத்தது. ஏற்கெனவே தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகியனவற்றில் விடுதலைச் சிறுத்தைகளோடு கைகோர்த்துச் செயல்பட்டதால் வன்னியர் வாக்குகள் பாமகவுக்கு எதிராகப் போய்விட்டனவோ என்கிற அவர்களது சந்தேகம். எனவே, விடுதலைச்சிறுத்தைகளோடு சேர்ந்ததால் இழந்த வாக்குகளை, அவர்களை எதிர்ப்பதன் மூலம் பெற்றுவிடலாம் என்று அவர்கள் நம்பியது ஆகிய இவை எல்லாமும்தான் இதற்குக் காரணம். நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியும் சட்டமன்றத் தேர்தலில் கிடைத்த ஏமாற்றமும் இனிமேல் தலித்துகளுக்கும் தலித் அல்லாதவர்களுக்குமான முரண்பாட்டைக் கூர்மைப்படுத்து வதுதான் நல்ல உத்தி என்று அவர்களை நினைக்க வைத்திருக்கிறது.

மதுரையில் செயல்பட்டுக்கொண்டிருந்த உங்களை வடமாவட்டங்களுக்கு அழைத்து வந்ததே நான்தான் என்று மருத்துவர் இராமதாஸ் சொல்கிறாரே?

அதை நன்றியுணர்வோடு பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். திராவிடர் கழகம், சுபவீ தலைமையிலான அன்றைய தமிழ் தமிழர் இயக்கம், பெரியார் இயக்கத்தினர் மற்றும் புரட்சிகர இயக்கத்தினர் உட்பட பலர் என்னை வடமாவட்டங்களுக்கு அழைத்திருக்கிறார்கள். 1992வாக்கில் மதுரை மேலூரில் நாங்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டு மருத்துவர் இராமதாஸ் பேசும்போது, நீங்கள் வட மாவட்டங்களுக்கும் வந்து பணியாற்ற வேண்டும் என்று பேசினார். அதைத்தான் நான் பல கூட்டங்களில், அவர் என்னை வடமாவட்டங்களுக்கு அழைத்ததாகப் பேசினேன். ஆனால் வட மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் வேகமாகப் பரவியநிலையில், அப்போதே எங்கள் மீது இதேபோல கடுமையான அவதூறுகளைப் பரப்பினார். அதன்படி 1998-99 ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது எங்கள் இயக்கத்தின் முன்னணிப் பொறுப்பாளர்கள் பலர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். அத்துடன், 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்களை எந்தக் கூட்டணியிலும் சேர்த்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக பெரிய கோப்புகளையெல்லாம் தயார் செய்துகொண்டு பல அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்கள். நாங்கள் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக வந்த பிறகு, எங்களோடு கைகோர்ப்பது அவசியம் என்பதோடு, வன்னியர் சங்கக்கொடியை திருமாவளவன் ஏற்ற வேண்டும் என்று சொன்னது, நான் தஞ்சாவூர் பக்கத்தில் வன்னியர் சங்கக்கொடியை ஏற்றியபோது, நான் கண்ட கனவு நனவாகிவிட்டது என்று பூரித்துப்போனது எல்லாம் நடந்தது.

சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிட்டபோது வரலாறு காணாத வன்முறையை அவர்கள் நடத்திய பின்பும் இரத்தக் கறையோடும் காயங்களோடும்தான் அவர்களோடு கை கோர்த்தோம். விடுதலைச்சிறுத்தைகள்தான் அவருக்கு தமிழ்க்குடிதாங்கி என்கிற பட்டத்தையும் அம்பேத்கர் சுடர் விருதும் கொடுத்துப் பெருமை சேர்த்தது. எங்களுக்கு இருக்கும் நன்றியுணர்வு அவர்களுக்கும் இருக்குமானால் எங்கள் மீது அவர்களால் அவதூறு சொல்ல முடியாது.

உங்கள் கட்சிக்காரர்கள் அரசியல்மயப்படுத்தப்படாமல் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களாகவே இருக்கிறார்கள் என்று சொல்லப்-படுவது பற்றி?

விடுதலைச் சிறுத்தைகளின் முன்னணிப் பொறுப்பாளர்களோடு அரசியல் பேசுவதற்கும் அரசியல் விவாதம் நடத்துவதற்கும் பாமகவினரோ வன்னியர் சங்கத்தினரோ வரட்டும், அப்போது யார் அரசியல்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்துகொள்ளும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பணக்காரப் பெண்களை காதல் என்று ஏமாற்றித் திருமணம் செய்து பணம் பறிக்கிறார்கள் என்றும் அதில் விடுதலைச் சிறுத்தையினர் அதிகளவில் ஈடுபடுகிறார்கள் என்றும் சொல்லப்படுவது பற்றி?

பள்ளி மாணவன்கூட இந்தக் கட்டுக்கதையை நம்ப மாட்டான். 21ஆம் நூற்றாண்டில் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத நகைச்சுவை. இது தலித் அல்லாத பெண் வர்க்கத்தையே இழிவுபடுத்துவதாக இருக்கிறது. காதல் இயற்கையானது. அது மதம், மொழி, இனம் ஆகிய எல்லாவற்றையும் கடந்தது. அது யாரும் சொல்லிக் கொடுத்து வருவதில்லை. தருமபுரியில் நடந்த துடைக்க முடியாத களங்கத்தை மறைப்பதற்காக, அதிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக இப்படிப்பட்ட அவதூறுகளைச் சொல்கிறார்கள்.

தலித் சமூகங்களுக்கிடையிலேயேகூட தீண்டாமை இருக்கிறது, திருமண பந்தங்கள் நடப்பதில்லை. அந்த வேறுபாடுகளைக் களைய முதலில் திருமாவளவன் முயலட்டும் என்று இராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

அவருக்கும் இந்தக் கடமை இருக்கிறதா? இல்லையா? சமூகத்தில் ஜனநாயகம் மலர வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொருவரும் செய்யவேண்டிய வேலை இது. சாதி அடிப்படையில் நடக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகளை அனைவரும் சேர்ந்து ஒழித்துக் கட்ட வேண்டும். அதை திருமாவளவன் மட்டும் செய்ய வேண்டும் என்பது அபத்தம்; குறுகிய பார்வை.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொல்கிறார்களே?

இந்திய அளவில் இந்தச் சட்டம் இரண்டு விழுக்காடு அளவில்கூடப் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. தமிழ்நாட்டில் ஒரு விழுக்காடு அளவுகூட இந்தச் சட்டத்தை யாரும் பயன்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியிலும் சரி, திமுக ஆட்சியிலும் சரி, இந்தச் சட்டத்தைத் தீவிரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவாகச் சொல்லப்பட்டி ருக்கிறது. இந்நிலையில் தலித்துகள் சொன்னவுடன் அந்தச் சட்டத்தை காவல்துறையினர் பயன்படுத்துகிற அளவுக்கு தலித்துகள் வலிமை பெற்றிருக்கிறார்களா என்ன? இது வடிகட்டிய அப்பட்டமான பொய்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவான வழக்குகளில் 98 விழுக்காடு நிரூபிக்கப்படாமல் போயிருக்கின்றன என்று சொல்கிறார்களே?

வழக்குகள் பதிவாவதற்கே போராட வேண்டியிருக்கிறது. அதையும் மீறிப் பதிவு செய்யப்படும் வழக்குகளை காவல் துறை அதிகாரிகள், ‘உண்மைக்கு மாறான தகவல்’ என்று பத்தே நாட்களில் தள்ளுபடி செய்துவிடுகிறார்கள். அதைவிட, பாதிக்கப்பட்ட தலித்துக்கு ஆதரவாக ஒரு ‘தலித் அல்லாதவர்’ சாட்சி சொல்ல வேண்டும் என்று சட்டம் சொல்லுகிறது. இது நடைமுறையில் சாத்தியமா? ஒரு வன்னியருக்கு எதிராக வழக்குப் பதிவாகிறது என்றால் இன்னொரு வன்னியர் வந்து சாட்சி சொல்ல வேண்டு மென்பது எப்படி நடக்கும்? எனவேதான் இந்தச் சட்டம் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இதனால் யாரும் பாதிக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை.

கலப்புத் திருமணங்கள் நடைபெற்றாலும் அந்தக் குடும்பங்கள் சம்பந்தப்பட்ட ஆணின் சாதியாகவே பார்க்கப்படுகின்றன எனும்போது கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிகிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?

அதற்குக் காரணம் இதுபோன்ற திருமணங்களின் விழுக்காடு மிகவும் குறைவாக இருப்பதுதான். இது அதிகரிக்கும்போது அவர்கள் சாதி-யற்ற-வர்கள் என்று அறிவிப்பவர்களாக இருப்பார்கள்.

சமூகநீதியை நிலைநிறுத்தும் என்று நம்பப்பட்ட இடஒதுக்கீடுதான் இப்போதைய சாதிய இறுக்கங்களுக்குக் காரணமாக இருக்கிறது என்கிறார்களே?

பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்ட பழங்குடியினரும் அதிகார வலிமை பெறுகிற வரையில் இந்த விவாதங்கள் இருக்கும். இவர்கள் அதிகார வலிமை பெறும்போது சாதி அடையாளம் உதிரும்.

தமிழ்த் தேசியத்தை மையமாகக் கொண்டு உங்களுடைய அரசியல் பயணம் இருக்கிற வேளையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர் என்கிற தோற்றம் பாதிப்பை ஏற்படுத்தாதா?

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்கூட, ‘நான் என்னதான் தேசிய அளவில் சிந்தித்தாலும் செயல்பட்டாலும் அனைத்து மக்களுக்குமான முன்னேற்றத்திற்குப் பாடுபட்டாலும் என்னை ஒரு தேசியத் தலைவராகப் பார்க்க மறுக்கிறார்கள், என்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே அடைக்கிறார்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதே அனுபவத்தைத்தான் இன்றைக்கு நானும் சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது.  என்னை ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நினைக்கும் முயற்சியை முறியடித்து தமிழர்களுக்கான பேரியக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் வலுப்பெறும் என்று சொல்லிக்கொள்கிறேன்.

டெசோ மாநாட்டில் கலந்துகொண்டதன்மூலம் ஈழச்  சிக்கலைப் பற்றிப் பேசும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று விமர்சிக்கப்படுவது பற்றி?

நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் திட்டமிடப்பட்ட தருமபுரி தாக்குதல் போன்ற வன்முறைச் செயல்களை அவர்கள் முன்கூட்டியே தொடங்கக் காரணமே ஈழப் பிரச்னையைத் திசைதிருப்பத்தான் என்று நான் நினைக்கிறேன். இவர்களுடைய செயல் திட்டத்தை இன்னும் சில மாதங்கள் கழித்துக்கூடத் தொடங்கியிருக்கலாம். ஆனால் டெசோ மாநாடு நடைபெற்று அதன்மூலம் தமிழகத்தில் ஒரு எழுச்சியும் உலகஅளவில் பரவலான கவனிப்பையும் ஈழச்சிக்கல் பெற்றது.  இவற்றிலிருந்து மக்களைத் திசைதிருப்ப வேண்டுமென்பதற்காக சிங்கள உளவுக் கும்பலோடு கைகோர்த்து இந்த வன்முறை நடத்தப்பட்டதோ என்கிற ஐயம் எனக்கு இருக்கிறது.

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இடம் பெற்றிருப்பதால் உங்களுடைய அடிப்படைக் கொள்கை களுக்கே முரணாகச் செயல்படவேண்டியிருக்கிறதா?

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்ட மைய நீரோட்ட அரசியலில் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால்தான் தனித்துப் போட்டியிடும் முடிவைக் கைவிட்டு கூட்டணி அரசியலில் சேருகிறோம். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகளை இணைத்துக்கொள்ள முடியாதென்று ஜெயலலிதா வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அதேவேளையில் திமுக கூட்டணியில்தான் விடுதலைச்சிறுத்தைகள் இருக்கிறார்கள் என்று திமுக தலைமை அறி

வித்தது. நாங்களும் உடன்பட்டோம். அதேசமயம் அந்தக் கூட்டணியில் இருக்க நேர்ந்ததால் எங்கள் கொள்கைகளை ஒரு விழுக்காடுகூட நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை. நாடாளுமன்றத்திலேயே நான் அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறேன். நேரடி அந்நிய முதலீடு விசயத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம் மதவாதசக்திகளுக்கு எதிராக இருக்கிற இந்த ஆட்சியைக் காப்பாற்ற வேண்டி வாக்களித்தோம். இன்றைக்கும் நேரடி அந்நிய முதலீட்டைக் கடுமையாக எதிர்க்கிறோம்.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுடைய செயல்பாடு எப்படியிருக்கும்?

திமுக கூட்டணியில்தான் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்கிறது. தேர்தல் நேரத்தில் பெரிய கட்சிகள் தங்கள் நிலைகளை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. எனவே தேர்தல் நேரத்தில்தான் விடுதலைச்சிறுத்தைகளின் நிலை குறித்து உறுதியாகச் சொல்லமுடியும்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அதிமுக அறிவித்திருக்கிறது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்களுடைய பேர வலிமையை இழந்துவிட்டதாகச் சொல்லப்படுவது பற்றி..?

அதிமுக தனித்துப் போட்டி என்று அறிவித்திருப்பதில் ஏதோ ஒரு சூழ்ச்சி இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன். இது முற்றிலும் உறுதியான முடிவென்று சொல்லமுடியாது. நாங்கள் காங்கிரசோடும் போக மாட்டோம், பாஜகவோடும் போக மாட்டோம் என்று சொல்லியிருப்பது இடதுசாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சிக்னல் என்றுதான் நினைக்கிறேன். பெரும்பான்மையான இடங்களில் அதிமுக போட்டியிடவேண்டும் என்பதிலிருந்து அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் எண்ணம் இருப்பதையும் உணரமுடிகிறது. ஆகவே மிகக் குறைந்த இடங்களில் போட்டியிட முன்வருகிறவர்களோடு அவர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

பிப்ரவரி, 2013.

logo
Andhimazhai
www.andhimazhai.com